Propellerads
Navigation

சகிப்பின்மை விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசவில்லை

நாட்டில் கடந்த ஆண்டு சகிப்பின்மை விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் தெரிவித்த கருத்து மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சகிப்பின்மை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் மற்றும் கரண் ஜோகர் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை வித்யாபாலன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மும்பையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

நம் எல்லாருக்கும் பேச்சுரிமை இருக்கிறது. நீங்கள் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி, திரையுலகில் பணிபுரிபவர்களாக இருந்தாலும் சரி, உங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதேசமயம், நீங்கள் ஒரு முன்னணி நடிகராக இருந்தால் பொதுமக்களால் அதிகம் கவனிக்கப்படுவீர்கள். சகிப்பின்மை விவகாரத்தில் யாரும் பொறுப்பற்ற முறையில் பேசிவிடவில்லை. என்னுடைய கருத்தை தெரிவிக்க எனக்கு உரிமை இருக்கிறது. 

அதனை எதிர்க்க உங்களுக்கும் உரிமை இருக்கிறது. அப்போது தான் அது ஆரோக்கியமான கருத்தாக விளங்கும். பெண்கள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிய அனுமதிக்க வேண்டும். அவர்களது கவுரவம், அணிந்திருக்கும் ஆடையை சார்ந்தது அல்ல. ஆண்களை போல், பெண்களும் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே எந்தவொரு வேறுபாடும் இருக்க கூடாது. நமது உலகம் கூட சமநிலையை நோக்கி நகர்கிறது. 

இன்றைய நாட்களில் ‘ஈவ்-டீசிங்’ என்பது எல்லா இடங்களிலும் நடக்கிறது. என்னுடைய கல்லூரி நாட்களுக்கு பிறகு, இதனை நான் அனுபவிக்கவில்லை. ஈவ்-டீசிங்குக்கு உள்ளாகும் போது பெண்கள் பயமின்றி, உறுதியாக ஆண்களை எதிர்கொள்ள வேண்டும். நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, அங்கு பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், அவர்கள் முன்னணியில் இருப்பதாக உணர்வேன். 

இன்றைக்கு பெண்கள் அனைத்து துறைகளிலும், அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள். கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளின் பிரசார தூதராக திகழ்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தால், அதனை நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். 

இவ்வாறு வித்யாபாலன் தெரிவித்தார்.
Share
Banner

Post A Comment: