Propellerads
Navigation

நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் காலம் வரும்

மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், கேத்தரின் தெரசா. வருகிற பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கும் ‘கதகளி’ படத்தில், விஷால் ஜோடியாக இவர் நடித்து இருக்கிறார்.

கேத்தரின் தெரசாவின் பூர்வீகம் கேரளா என்றாலும், அவர் துபாயில் வளர்ந்தவர். சென்னையில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கேத்தரின் தெரசா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சினிமாவில் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே சம்பள வேறுபாடு இருப்பது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில்:- ஆண்களுக்கு இணையாக பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. சினிமாவிலும் அது வரவேண்டும் என்று விரும்புகிறேன். சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று ஒரேயடியாக கூறிவிட முடியாது. பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வர ஆரம்பித்துள்ளன. இதற்கு உதாரணமாக, ‘மாயா’ படத்தை கூறலாம். எனவே நடிகர்களுக்கு இணையாக நடிகைகள் சம்பளம் வாங்கும் காலம் வரும்.

கேள்வி:- சமந்தா போன்ற கதாநாயகிகள் சமூக சேவையில் ஈடுபடுகிறார்களே, உங்களுக்கு அதில் ஈடுபாடு உண்டா?

பதில்:- மிருகங்கள் மீது அன்பு செலுத்துவதில், நான் ஆர்வமாக இருக்கிறேன்.

கேள்வி:- நீங்கள் நடித்த ‘கதகளி’ படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்:- ‘கதகளி’ படம், பண்டிகை காலத்தில் வெளிவருவது சந்தோஷமாக இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள். அவர்களை திருப்தி செய்யும் வகையில் படங்கள் வெளிவருவது, வரவேற்கத்தக்கது. நான் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படம் இது. இதில், மருந்துக்கடையில் வேலை செய்யும் பெண்ணாக நடித்து இருக்கிறேன்.

கேள்வி:- சென்னை உங்களுக்கு எப்படி இருக்கிறது, தமிழ் மக்களை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- சென்னை எனக்கு பிடித்து இருக்கிறது. தமிழ் மக்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்கள். அன்பானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள். சென்னையில் வசிப்பது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

கேள்வி:- நடிக்கும்போது தமிழ் வசனங்களை எப்படி பேசுகிறீர்கள்?

பதில்:- எனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும். ‘மெட்ராஸ்’ படத்தில் எனக்கு இரவல் குரல்தான் என்றாலும், என் உதட்டு அசைவுகள் வசனங்களுக்கு பொருத்தமாக இருந்ததாக எல்லோரும் பாராட்டினார்கள். தமிழ், அழகான மொழி. அதை பேசுவதற்காக பெருமைப்படுகிறேன்.

கேள்வி:- எதிர்காலத்தில், தமிழ் இளைஞரை திருமணம் செய்து கொள்வீர்களா?

பதில்:- என் மனதுக்கு பிடித்து விரும்பத்தக்கவராக இருந்தால், நிச்சயமாக ஒரு தமிழ் இளைஞரை திருமணம் செய்து கொள்வேன்.’’

இவ்வாறு கேத்தரின் தெரசா கூறினார்.
Share
Banner

Post A Comment: