Propellerads
Navigation

ரஜினி கூறிய குட்டிக்கதை

இன்று நடைபெற்ற 'நெருப்புடா' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால், 'திரைவிமர்சனம் செய்பவர்கள் முதல் மூன்று நாட்களை விட்டுவிட்டு நான்காவது நாள் விமர்சனம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு குட்டிக்கதை மூலம் விமர்சனம் செய்பவர்களுக்கு ஒரு கருத்தை தனது பாணியில் கூறினார். அவர் கூறியதாவது:

ஒரு சினிமா எடுப்பது எங்களுடைய கடமை, எங்களுடைய வேலையும் அதுதான். அதுபோல் அந்த படத்தை விமர்சனம் செய்வது பத்திரிகையாளர்களின் கடமை என்பதிலும்  சந்தேகம் இல்லை. ஆனால் விமர்சனம் செய்யும்போது அந்த படத்தில் உள்ள நல்லவற்றையும் கூறுவதோடு, அந்த விமர்சனம் யாரையும் புண்படுத்தும் வகையில் இல்லாமல் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு ஒரு குட்டிக்கதை ஒன்றை ரஜினிகாந்த் கூறினார். ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பிறக்கவில்லை. பல கோயில்கள் படி ஏறி, இறங்கிய பின்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் ஜாதகத்தை தெரிந்து கொள்ள ஒரு ஜோசியரை அழைத்தார்.

அவர் அந்த குழந்தையை பார்த்துவிட்டு, இந்த குழந்தையால் உங்களுக்கு ஒரு மரணம் ஏற்படும் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, அந்த ஜோசியரை ஜெயிலில் போட்டுவிட்டார். பின்னர் இன்னொரு ஜோசியரை அழைத்து அவரிடம் குழந்தையின் ஜாதகத்தை கணிக்க சொன்னார்.

அவர் குழந்தையின் ஜாதகத்தில் முன்னர் கூறிய ஜோசியர் கூறியது உண்மை என்பதை கண்டறிந்தாலும் அதை கூறாமல், அந்த குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருப்பதை அறிந்து அவர் ராஜாவிடம் இந்த குழந்தை உங்களை விட நூறு மடங்கும் புகழ் பெறுவார் என்று கூறினார். இதனால் மன்னர் மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அவர் அதற்கு ஜெயிலில் உள்ள ஜோசியரை விடுதலை செய்யுங்கள், அதுபோதும் என்று கூறினார்.

எனவே ஒருவரிடத்தில் என்ன சொல்ல வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்பதை அறிந்து இரண்டாவது ஜோசியர் கூறியது போல் யார் மனதையும் புண்படுத்தாமல் விமர்சனம் செய்யுங்கள்' என்று ரஜினிகாந்த் இந்த குட்டிக்கதை மூலம் கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: