நடிகர் சங்கத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் நேற்று மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், ‘முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது அவர்களது ரசிகர்கள் பாலாபிஷேகம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை வீணாக்குகிறார்கள். தமிழகத்தில் 15 சதவீத மக்கள் பால் வாங்கவே வழியின்றி அல்லல்பட்டு வருவதுடன், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என லட்சக்கணக்கான மக்கள் பாலின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நடிகர்கள் படத்திற்கு பாலாபிஷேகம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி கூறியதாவது:-
எங்களது சங்கத்தின் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க சென்றிருந்தோம். நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் படப்பிடிப்பில் இருந்த காரணத்தால் நடிகர் சங்கத்தின் மேலாளர் பாலமுருகனிடம் கோரிக்கை மனு வழங்கியிருக்கிறோம்.
எங்களது கோரிக்கை மனுவை உடனடியாக வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் எங்களது கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகள் குறித்து எங்களுக்கு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.



Post A Comment: